பெங்களூரு சிறையில் 4 ஆண்டுகளாக சசிகலா உடல்நிலை நன்றாக இருந்த நிலையில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பது சந்தேகம் ஏற்படுத்துவதாக சீமான் கூறியுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருக்கும் சசிகலா வருகின்ற ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்படுவார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது. ஆனால் அவருக்கு கடந்த 19 ஆம் தேதி திடீரென சுவாசக் கோளாறு ஏற்பட்டதால் மருத்துவக்குழு பெங்களூரு சிறைக்கு விரைந்தது. அங்கு அவருக்கு லேசான காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத்திணறல் இருந்ததால் சிகிச்சைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதன்பிறகு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
அதனால் அவருக்கு பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் 4 ஆண்டுகளாக சசிகலா உடல்நிலை நன்றாக இருந்த நிலையில்,திடீரென அவருக்கு உடல் நலம் குன்றி உள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார். முதல்வரின் டெல்லி பயணத்திற்கும், சசிகலா உடல்நிலை சரி இல்லாமல் போனதற்கும் எதுவும் தொடர்பு இருக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.