இன்று மாலை தமிழக முதல்வரை பாமக நிறுவனர் ராமதாஸ் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று மாலை 4 மணிக்கு பசுமைவழிச் சாலை இருக்கக்கூடிய முதலமைச்சரின் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் முதலமைச்சரை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தொடர்ந்து வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக பலகட்ட பேச்சுவார்த்தையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த டிசம்பர் 1ஆம் தேதி கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை முற்றுகையிட கூடிய போராட்டத்தை பாமக சார்பில் நடத்தப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமகவினர் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரை சந்தித்து,இந்த கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதன் தொடர்ச்சியாக பல்வேறு முறையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தமிழக அமைச்சர்கள் குழு தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ்ஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. இறுதியாக பேச்சுவார்தையில் உடன்பாடு எட்டப்பட்டதாக தெரிகின்றது.
இந்த நிலையில் இன்று மாலை 4 மணிக்கு பாமக தலைவர் ராமதாஸ் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை பசுமை வழிச்சாலையில் இருக்க கூடிய முதல்வர் இல்லத்தில் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த சந்திப்பின்போது வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு, வர இருக்கக்கூடிய சட்டப்பேரவை கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது. அதன் தொடர்ச்சியாக இந்த சந்திப்பு தொடர்பான அதிகாரபூர்வமான தகவல்கள் வெளியாகலாம் என தெரிகிறது.