தமிழகம் முழுவதும் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட நிதி கடனில் முறைகேடு நடந்துள்ளதாக பெண்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் கடந்த 15ஆம் தேதி மகளிர் சுய உதவி குழுக்கள் சுழல் நிதி கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் முக ஸ்டாலின் கலந்து கொண்டு ரூபாய் 3000 கோடி அளவிலான கடன் உதவிகளை வழங்கினார். அதன்படி திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. அந்த காசோலையை முதல்வர் முக ஸ்டாலின் வழங்கினார் .அந்த காசோலையை அக்குழுவின் தலைவியான பிரியங்கா எடுத்துச் சென்று திருவள்ளூரில் உள்ள காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் பணமாக மாற்ற முயன்ற போது, வங்கி தரப்பினர் இந்த காசோலைக்கு இதுவரை கடன் தேர்வாகவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் தமிழக முதலமைச்சர் பங்கேற்ற காரணத்தினால் அவசர அவசரமாக சம்பிரதாயத்திற்காக இதுபோன்ற காசோலை வழங்கியதாகவும், இந்த காசோலையை வங்கி அதிகாரிகளிடம் கொடுத்து விடுமாறு தெரிவித்துள்ளார் .இதனால் அதிர்ச்சி அடைந்த மகளிர் சுய உதவிக்குழுவினர் செய்வதறியாமல் தவித்தனர். மகளிர் சுய உதவி குழு பெண்களை வரவழைத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கிய காசோலைக்கு பணம் வழங்க மறுத்ததால் பெண்கள் அனைவரும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாக அந்த குழுவின் தலைவி பிரியங்கா குற்றம்சாட்டியுள்ளார்.