மின்சாரம் கொள்முதல் செய்வதற்கு மின்வாரியத்துக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
தமிழகத்தில் தினசரி மின் தேவை 14,000 மெகாவாட் என்ற அளவில் உள்ளது. இது கோடை காலத்தில் அதிகரிக்கும், குளிர்காலத்தில் குறையும். தமிழ்நாட்டில் மின்சாரத்தின் தேவைக்கும் உற்பத்திக்கும் இடையே உள்ள இடைவெளி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இதனை சமாளிக்க வெளிசந்தையிலிருந்து மின்சாரத்தை வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தமிழ் நாடு தள்ளப்பட்டுள்ளது. ஆனால் வெளிச்சந்தையில் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
தமிழ்நாடு மின் உற்பத்தியையும் மின்சாரம் வழங்கி வந்த தனியார் நிறுவனங்களின் மின் உற்பத்தியும் கணிசமாக குறைந்து விட்ட நிலையில் மின்வெட்டை தவிர்ப்பதற்கு வெளி சந்தையில் இருந்து மிக அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கப்பட்டதாக கூறப்பட்டது. இதனை களையவும், தமிழகத்தை மின் மிகை மாநிலமாக மாற்றவும் மின் உற்பத்தியை மாநிலத்திலேயே அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுப்பெற்றது. இந்நிலையில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஆயிரம் மெகாவாட் மின்சாரம் வாங்க மின் வாரியத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மின் வாரியத்தின் அனல் மின் நிலையம், நீர்மின் நிலையம், எரிவாயு மின் நிலையங்களில் இருந்து கிடைக்கும் மின்சாரம் தினசரி மின் தேவையை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை. இதனால் தனியார் மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் வாங்கப்படுகிறது. இருப்பினும் மின் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியவில்லை. இதனால் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கேட்டு மின் வாரியம் விண்ணப்பித்திருந்தது. அதனை ஏற்ற மின் வாரியம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கியுள்ளது. இந்த மின்சாரத்தை யூனிட் 3.26 என்ற விலையில் வாங்குவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வரும் காலங்களில் மின்தடை ஏற்படும் வாய்ப்பு இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகின்றது.