தமிழகத்தில் கடந்த மே மாதத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மு.க ஸ்டாலின் முதல்வர் ஆவதற்கு முன்பாகவும், அதன் பின்பும், உடல் ஆரோக்கியத்தில் தனி கவனம் செலுத்தி வருகின்றார். அவர் தனது வீட்டிலேயே உடற்பயிற்சி கூடம் வைத்திருக்கிறார். அதில் பலவிதமான பயிற்சிகளில் ஈடுபடுவதுடன் காலை நேரத்தில் நடைபயிற்சியும் செய்வார். சென்னையில் இருந்து மாமல்லபுரம் வரை குறிப்பிட்ட தூரம் சைக்கிளிங் செய்வதும் வழக்கமாக கொண்டிருக்கிறார். வாரத்தில் மூன்று நாட்கள் காலையில் சுமார் 20 முதல் 30 கிலோ மீட்டர் தூரம் வரை வழக்கமாக சைக்கிளில் செல்வார்.
அப்போது அவரது மருமகனும் இவருடன் செல்வார். செல்லும் வழியில் முதல்வரை பொது மக்கள் மிகவும் ஆர்வத்துடன் கண்டு ரசிப்பார்கள். ஸ்டாலின் தேநீர் அருந்தும் கடை மற்றும் அவர் இளைப்பாறும் இடங்களில் பொதுமக்கள், இளைஞர்கள், மற்றும் சிறுவர்கள் ஆர்வத்துடன் வந்து செல்ஃபி எடுப்பது வழக்கமாக கொண்டிருக்கின்றன. அந்த சமயத்தில் நேற்று காலை சபரீசன் உடன் ஸ்டாலின் சைக்கிளில் செல்லும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. முட்டு காட்டிலிருந்து தன்னுடைய சைக்கிளின் பயணத்தை தொடங்கியுள்ளார். அதன்பின்னர் கோவளம், திருவிடந்தை, வடநெம்மேலி, நெம்மேலி புதிய கல்பாக்கம், சூளேரிக்காடு, பட்டிபுலம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக மாமல்லபுரம் சென்று அடைந்துள்ளார்.
இவர்களுடன் இணைந்து வேறு சிலரும் சைக்கிளிங் சென்றிருக்கிறார். பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்களை வழியில் பார்த்து புன்னகையுடன் கையசைத்துக் கொண்டு பயணம் செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து பொதுமக்களும் ஸ்டாலினை பார்த்து கையசைத்து உள்ளனர். முடிவாக மாமல்லபுரம் சாலையில் உள்ள தேநீர்க் கடையில் சிறிது நேரம் அமர்ந்து தேநீர் அருந்தியுள்ளார். அதன் பின் அங்கிருந்த நபர்களுடன் செல்ஃபி எடுத்துள்ளார். இந்தக் காட்சி வீடியோவாகவும், புகைப்படங்களாகவும், சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றது.