உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பயிற்சி முகாமில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சிகள் வைக்கும் கோரிக்கைகளை எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும் ?என்பது குறித்து எடுத்துரைத்து, அறிவுரை வழங்கினார். பல்வேறு தரப்பினரும் இதற்கு வரவேற்பு அளித்துள்ளனர். அதேபோல் முதல்வரின் அணுகுமுறையை தேமுதிகவின் நிறுவன தலைவர் விஜயகாந்த் வரவேற்றுள்ளார். இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள விஜயகாந்த், “உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற பெண் கவுன்சிலர்களுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அவர்களுடைய கணவன்மார்கள் பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபட்டனர்.
இதனை தடுக்க வேண்டும் என்று தேமுதிக சார்பில் அண்மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதன் எதிரொலியாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நடந்த உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பயிற்சி முகாமில் எதிர்க்கட்சியினர் வைக்கும் கோரிக்கைகளை எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும் ? என்று எடுத்துரைத்து அறிவுரை வழங்கியுள்ளார். இதனை தேமுதிக மனதார வரவேற்கிறது.
அதேபோல் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தமிழக அரசின் முழுமையான குறிக்கோள் கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுப்பதே என்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளதையும் தேமுதிக வரவேற்கிறது. விருதுநகர் இளம்பெண் பாலியல் வழக்கில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையை வழங்க கோரி தேமுதிக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் எதிரொலியாக குற்றவாளிகளில் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதை தேமுதிக மனமுவந்து வரவேற்கிறது” என்று அவர் கூறியுள்ளார்.