தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆட்சி நிர்வாகம் அனைத்து மாநிலங்களுக்கும் ஊக்கம் அளிக்கும் விதத்தில் இருப்பதாக நடிகர் பவன் கல்யாண் பாராட்டியுள்ளார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்ற திமுக கட்சி ஆட்சி அமைத்தது. இந்த கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். பதவி ஏற்றுக்கொண்ட நாளில் இருந்தே பல முக்கிய நலத் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறார். பெண்களுக்கு இலவச பேருந்துப் பயணம், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு இலவச பேருந்து வசதி, வீடு தேடி வரும் மருத்துவம் போன்ற பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இந்த திட்டத்தினால் ஈர்க்கப்பட்ட தெலுங்கு சூப்பர் ஸ்டாரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன்கல்யாண் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களை பாராட்டி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: “அன்பிற்குரிய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் ஆட்சிக்கு வரவேண்டும் என்றால் அரசியல் செய்ய வேண்டும். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் செய்யக்கூடாது. அதை வார்த்தைகளால் அல்ல, செயல்களால் நீங்கள் நிரூபித்து உள்ளீர்கள். உங்கள் ஆட்சி நிர்வாகம் உங்கள் மாநிலத்திற்கு மட்டுமல்ல, நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஊக்கம் அளிக்கும் விதத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார். உங்கள் நல்லாட்சிக்கு மீண்டும் என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்” என்று அதில் பாராட்டி பதிவிட்டுள்ளார்.