தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடி டெல்லியில் சென்று சந்தித்து செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவுக்கு அழைப்பு விடுக்க திட்டமிட்டு இருந்தார். ஆனால் கொரோனா காரணமாக செல்ல முடியாமல் போனதால் தொலைபேசியில் மட்டுமே அழைப்பு விடுத்தார் என்று செஸ் துவக்க விழாவில் ஸ்டாலின் பேசும்போது கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது மோடியை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளார். அது மட்டுமில்லாமல் தமிழகத்துக்கு வரவேண்டிய நிலுவையில் உள்ள நதிகளை விடுவிப்பது, தமிழகத்திற்கான திட்டங்கள் பரந்தூர் புதிய விமான நிலையம், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு நிலுவையில் உள்ளது, நீட் மசோதாவுக்கு ஒப்புதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஸ்டாலின் வலியுறுத்துவார் என்று கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து செஸ் ஒலிம்பியார் தொடக்க விழாவில் மோடியுடன் முதல்வர் ஸ்டாலின் காட்டிய நெருக்கம் விமர்சனங்களை ஏற்படுத்தியது. கூட்டணிகள் விரிசல் ஏற்படும் அளவுக்கு பேசப்பட்டது. ஆனால் வெளிநாடவர்கள் கலந்து கொண்ட ஒரு பொது நிகழ்ச்சியில் முதல்வர் என்ற முறையில் பிரதமருடன் ஸ்டாலின் பேசியதாக திமுகவினர் தெரிவித்தனர் .
இந்த முறையும் ஏதேனும் விமர்சனங்கள் வந்து விடக்கூடாது என்பதால் விசிக தலைவர் திருமாவளவன் பிறந்தநாள் விழாவில் பேசிய போது, பாஜகவுடன் ஒருபோதும் திமுக சமரசம் செய்து கொள்ளாது என்று திட்டவட்டமாக ஸ்டாலின் தெரிவித்துவிட்டு டெல்லிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து புதிதாக பதவியேற்ற குடியரசு தலைவர், குடியரசு துணை தலைவர் ஆகியோரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கவும் என அதிகாரப்பூர்வமாக ஸ்டாலின் டெல்லி பயணம் குறித்து சொல்லப்பட்டாலும் எதிர் முகாமில் இருப்பவர்கள் அவரது டெல்லி பயணம் பற்றி வேறு விதமாக பேசுகிறார்கள். அதாவது திரௌபதி முர்மு, ஜெகதீஷ் தன்கர் ஆகியோருக்கு ஆதரவாக வாக்களித்த மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் கூட அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க டெல்லி செல்லாதபோது ஸ்டாலின் மட்டும் ஏன் அவசர அவசரமாக டெல்லிக்கு செல்ல வேண்டும் என்று கேள்வி எழுப்புகின்றனர்.இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் துபாய் சென்ற முதல்வர் ஸ்டாலின் ரூ.6000 கோடி மதிப்பிலான முதலீடுகளை கொண்டு வந்தார். அதில் முக்கியமானது லூலு குழும முதலீடு ஆகும். தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ரூ.3500 கோடி மதிப்பில் அந்த நிறுவனத்துடன் புரிந்துணர் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் பின்னணியில் முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் முக்கிய பங்காற்றி உள்ளார். அதன்படி துபாயில் இருந்து தமிழகத்தில் செய்யப்பட்ட முதலீடுகளின் ஸ்டாலின் குடும்பத்தினருக்கு பங்கு இருக்கலாம் என்று எதிர்முகாமில் இருப்பவர்கள் கூறுகிறார்கள். மேலும் ஸ்டாலின் மருமகன் சபரீசன் சமீபகாலமாக அடிக்கடி வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவரது வெளிநாட்டு பயணங்களையும், அங்கு செய்யப்படும் முதலீடுகளையும் கண்காணிக்க மத்திய பாஜக தனி டீம் ஒன்றை வைத்துள்ளதாகவும் தூதராகம், உளவு அமைப்புகள் முலம் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அந்த டீம் சமீபத்தில் ஒரு ரிப்போர்ட்டை டெல்லிக்கு அனுப்பியுள்ளதாகவும் கூறுகிறார்கள். இந்த பின்னணியில் தான் ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளதாகவும், வெளிநாடுகளில் பாஜகவுடன் அவர் இணக்கம் காட்டி வருவதாகவும் எதிர்த்தரப்பினர் கூறுகிறார்கள்.