சொத்து வரி உயர்வை கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடிபழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியபோது, திமுக அரசு பொறுப்பேற்று 10 மாதம் ஆகிறது. இந்த 10 மாதத்தில் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யப்படவில்லை. மக்கள் விரோத ஆட்சி நடைபெற்று வருகிறது எனவும் கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் கடுமையாக வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சொத்து வரி உயர்வை மக்கள் மீது சுமையை உயர்த்துவதாக உள்ளது, மக்கள் அச்சத்தில் உறைந்து இருக்கின்றன.
மேலும் மத்திய அரசு எந்த இடத்திலும் சொத்துவரி உயர்த்த வேண்டும் என கூறவில்லை.திடீரென சொத்து வரி உயர்த்தப்படுவதாக அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். திமுக தேர்தல் அறிக்கையில் சொத்து வரி உயர்த்த மாட்டோம் என அவரே கூறி விட்டு தற்போது அவரை இதனை நியாயப்படுத்தும் வகையில் பேசியிருக்கிறார். உள்ளாட்சி தேர்தல் முதல் பொதுத் தேர்தலிலும் முடியும் வரை காத்திருந்து வாக்களித்த மக்களுக்கு பரிசாக சொத்து வரியை உயர்த்தி இருக்கிறது.
எதிர்க்கட்சியாக இருக்கும்போது சொத்துவரியா சொத்தை பறிக்கும் வரியா என பேசியவர் இன்றைக்கு உயர்வை நியாயப்படுத்தி பேசுவது ஏற்கத்தக்கதல்ல. எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது ஒரு பேச்சு. முதலமைச்சராக இருக்கும்போது ஒரு பேச்சு என ஸ்டாலின் மாற்றி மாற்றிப் பேசுகிறார். மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் அரசு தான் உண்மையான அரசு அந்த வகையில் அதிமுக அரசு செயல்பட்டது என பழனிசாமி பேசியுள்ளார்.
முன்னதாக சொத்து வரி உயர்வு குறித்து முதல்வர் முக ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசும்போது, சொத்து வரி உயர்வை இந்த அரசு மனமுவந்து செய்யவில்லை உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி கிடைக்காது எனக் கூறும் போது அதனை சமாளிக்கும் கட்டாயத்திற்காக இந்த அரசு தள்ளப்படுகிறது என விளக்கம் அளித்துள்ளார்.