திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை, தாயனூர் கேர் கல்லூரியில் ரூ.1,085 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று திட்டங்களை தொடங்கி வைத்தார். இதனையடுத்து விழாவில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது,
“மக்கள் பிரச்சினைகள் தொடர்பாக எதிர்க்கட்சியினர் கூறுவதற்கு முன்பாகவே நேரில் சென்று அந்த பிரச்சினைகளை முதல்வர் ஸ்டாலின் தீர்த்து வைத்து வருகிறார். இதன் மூலமாக எதிரிகள் கூட குறை கூற முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. எனினும் சில பேர் வேண்டுமென்றே குறை கூறுகிறார்கள். அதை காதில் வாங்கிக் கொள்வதில்லை.
இவ்வாறு தமிழக முதல்வரின் சிறப்பான செயல்பாடுகளை கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியினர் பாராட்டுகின்றனர். தமிழகத்தில் நல்லாட்சி அமைத்தது போன்று இந்தியாவிலும் நல்லாட்சி அமைய முதல்வர் ஸ்டாலின் முயற்சி எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்பிக்கள் வலியுறுத்துகின்றனர். இதற்கான காரணம் முதல்வர் அவர்கள் கூட்டணிக் கட்சியினரை அரவணைத்து செல்வதே ஆகும்.
மேலும் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் தொடங்கிய கூட்டணி போராட்டங்கள், நாடாளுமன்ற தேர்தல், சட்ட மன்ற தேர்தல், அடுத்து வருகின்ற உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணிக் கட்சியினரை முதல்வர் ஸ்டாலின் அரவனைத்து செல்வது தான் இதற்கு காரணம் ஆகும்.
திருச்சி மாவட்டம் பெரிய அளவில் வளர்ச்சி பெற்றதற்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியும், தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலினும் தான் முக்கிய காரணம். திருச்சியை 2-வது தலைநகராக அறிவிக்காமல் தமிழகத்திற்கு மையமாக திருச்சியை உருவாக்க வேண்டும் என்று எம்.பி திருநாவுக்கரசர் தெரிவித்தார். இதற்குரிய பணிகளை முதல்வர் ஸ்டாலின் கடந்த 3 மாதங்களுக்கு முன்பே தொடங்கி விட்டார். இதனிடையில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் சமமாக திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் திருச்சியில் கொண்டுவர வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கையாகும். திருச்சி பஞ்சப்பூரில் 5 நெடுஞ்சாலைகள் இணையும் இடத்தில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படுகிறது.
அந்த நிலம் முழுவதும் மாநகராட்சிக்கு சொந்தமானது ஆகும். முதல் கட்டமாக 350 கோடி ரூபாயில் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. அதன்பின் பெரிய பெரிய தொகைகளை இதற்காக முதல்வர் ஒதுக்கீடு செய்வார். இதனைத்தொடர்ந்து அரைவட்ட சாலை திருச்சி மாவட்டத்தில் அமைக்கப்பட இருக்கிறது. அதாவது அசூர் முதல் பஞ்சப்பூர், கம்பரசம்பேட்டை, காவிரி, கொள்ளிடம் ஆறு, மண்ணச்சநல்லூர், கல்லணை வரை அரை வட்ட சாலை அமைக்கப்பட உள்ளது. வைகை ஆற்றை போன்று திருச்சி கோரையாற்றுகரையை சாலையாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. திருச்சியை மையமாகக் கொண்ட 45 சட்டமன்ற தொகுதிகளில் 41 தொகுதிகளில் மக்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு ஆதரவளித்துள்ளனர்.
அதேபோன்று திருச்சியை மையமாக கொண்ட 70 தொகுதிகளிலும் மக்கள் ஸ்டாலின் பக்கம்தான் இருக்கிறார்கள். ஆகவே நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீத வெற்றியை சமர்ப்பிப்போம். நீங்கள் விரும்பும் வரை உங்கள் ஆட்சிதான் தமிழகத்தில் இருக்கும்” என்று அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.
இவ்விழாவில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மா. சுப்பிரமணியன், தமிழக அரசு கொறடா கோவி. செழியன், அமைச்சர்கள் சக்கரபாணி, ரகுபதி, மெய்யநாதன், சிவசங்கர், தமிழ்நாடு அரசு டில்லி சிறப்பு பிரதிநிதி ஏகேஎஸ் விஜயன், மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா போன்றோர் கலந்து கொண்டனர்.
அதேபோன்று மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருநாவுக்கரசர், ஜோதிமணி, மாவட்ட ஆட்சியர் சிவராசு, சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன் போன்றோர் கலந்துகொண்டனர். மேலும் இனிகோ இருதயராஜ், ஸ்டாலின் குமார், காடுவெட்டி தியகராஜன், பழனியாண்டி, கதிரவன் மற்றும் உள்ளாட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள், பிரதிநிதிகள், திமுக மாவட்ட, மாநகர, ஒன்றிய, பேரூர், நிர்வாகிகள் பெரும்பாலானோர் கலந்துகொண்டனர்.