அமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸ், தனது முதல் உரையில் தனது தாயை நினைவு கூர்ந்துள்ளார்.
அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மாதம் நடைபெற உள்ள ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல்களில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மற்றும் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் ஆகியோர் போட்டியிட உள்ளனர்.ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் போட்டியிடுகின்றார். அந்த கட்சியின் சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் (55) போட்டியிடுகின்றார். இதனை நேற்று முன்தினம் ஜோ பைடன் அறிவித்திருந்தார். கமலா ஹாரிசின் தந்தை டொனால்டு ஹாரிஸ் ஜமைக்காவை சேர்ந்தவர். தாய் சியாமளா கோபாலன் சென்னையை சேர்ந்தவர்.
இதனை தொடர்ந்து டெலவர் மாகாணத்தின் வில்மிங்டன் நகரில் நடந்த பிரசார நிகழ்ச்சியில் முதல் முறையாக ஜோ பைடனுடன் சேர்ந்து கமலா ஹாரிஸ்ஸும் பங்கேற்றார். அப்போது உரையாற்றிய அவர் தனது தாய் சியாமளா கோபாலனை நினைவு கூர்ந்து பேசியுள்ளார். அவர் ஆற்றிய உரையில்,” உலகின் எதிரெதிர் பகுதிகளை சேர்ந்த என் தந்தையும், தாயும் உலகத்தரமான கல்வியைத் தேடி அமெரிக்கா வந்ததை அனைவரும் அறிவீர்.கடந்த 1960ஆம் ஆண்டு நடந்த சிவில் உரிமை போராட்ட இயக்கத்தில் அவர்கள் ஒன்றிணைந்தனர். குறிப்பாக மாணவ பருவத்திலேயே ஓக்லாந்து தெருக்களில் பேரணி, நீதிக்கான ஆர்ப்பாட்டம் என அவர்கள் போராடியுள்ளனர்.
அதன் பின்னர் நடந்த அந்த போராட்டங்களில் நானும் பங்கேற்றுள்ளேன். அந்த ஆர்ப்பாட்டங்களுக்கு என்னையும் பெற்றோர் அழைத்து வருவார்கள். அந்த போராட்டங்கள் இன்று வரை தொடர்ந்து வருகின்றன. என் வாழ்க்கையில் என் அம்மா சியாமளாவின் பங்களிப்பு மிகவும் பெரியது. அவர் என்னையும், சகோதரி மாயாவையும் எப்படி வளர்த்தாரென்றால், நாங்களும், ஒவ்வொரு அமெரிக்க தலைமுறையும் பேரணியை தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் தான் வளர்த்துள்ளார்.
வாழ்க்கையில் ‘பிரச்சினை வரும்போது உட்கார்ந்து அதைப்பற்றி குறை சொல்லிக்கொண்டிருக்கக்கூடாது, மாறாக அதில் இருந்து மீண்டு வர முயற்சி செய்ய வேண்டும்’ என்று எனது அம்மா அடிக்கடி கூறுவார். அதனால் நான் அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு செதுக்கிய சொற்களை உண்மையானதாக மாற்றுவதற்கு, சட்டத்தின் கீழ் சம நீதி கிடைக்க என் வாழ்க்கையையே அர்ப்பணித்துள்ளேன். கலிபோர்னியா அட்டார்னி ஜெனரலாக நான் பணியாற்றி கொண்டிருந்த போது, ஆயுதங்கள், மனிதர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை பன்னாட்டு குற்றவியல் அமைப்புகளில் நிறுத்தினேன்” என்று அவர் கூறியுள்ளார்.
அமெரிக்க துணை ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளதற்கு அமெரிக்கவாழ் இந்திய முஸ்லிம்கள் மற்றும் சீக்கியர்கள் வரவேற்பு அளித்துள்ளனர். ஒட்டுமொத்த இனத்துக்கும் இது மிக பெரிய வெற்றி என அவர்கள் கூறியுள்ளனர். மேலும் கருப்பினத்தவர், பெண்கள் மற்றும் அனைத்து குடியேறிகளுக்கும் இது ஒரு மகிழ்ச்சியான விஷயம் என அமெரிக்க தேசிய சீக்கிய பிரசாரம் அமைப்பின் மூத்த ஆலோசகர் ராஜ்வந்த் சிங் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து கமலா ஹாரிசை துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்தில், ஜோ பைடனுக்கு 26 மில்லியன் டாலர்கள் தேர்தல் நன்கொடையாக கிடைத்துள்ளன. இது முந்தைய நாளை விட இரு மடங்கு அதிகம் ஆகும். இது உண்மையிலேயே உற்சாகம் அளிக்கக்கூடிய விஷயம் என்று ஜோ பைடன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.