நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தின் முதல் நாளிலேயே வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி நேற்று முன்தினம் மக்களிடம் உரையாற்றும்போது, 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறப்படும் என்றும், வருகின்ற குளிர்கால கூட்டத்தொடரில் ரத்து செய்யப்படும் என்று கூறினார்.. எனவே போராட்டத்தை கைவிடுமாறு விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டார் பிரதமர் மோடி. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வருகின்ற 29ஆம் தேதி நடைபெற உள்ளது..
இந்நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் சென்னை தேனாம்பேட்டை முரசொலி அரங்கில் எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது.. இதில் துரைமுருகன், பொன்முடி, எ.வா வேலு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.. இந்த கூட்டத்தின் போது, குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதாக்களை கொண்டு வரவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி உயிர்த்தியாகம் செய்த 700க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு கூட்டத்தில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.. அறவழிப் போராட்டம் மூலம் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வைத்த விவசாயிகளுக்கு கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.