தமிழகத்தில் இன்று( ஜூலை 18) “தமிழ்நாடு நாள் விழா”கொண்டாடப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்தும் விதமாக பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப் போட்டி ஆகியவை நடத்தப்படுகின்றது. அவ்வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று 6-12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டி நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
செங்கல்பட்டு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை 9:30 மணிக்கு கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டி நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க விரும்பும் மாணவ மாணவிகள் தாங்கள் பயிலும் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் பரிந்துரை கடிதம் ஒன்றை பெற்று வர வேண்டும். ஒரு பள்ளியில் இருந்து இரண்டு மாணவர்கள் இந்த போட்டியில் கலந்து கொள்ளலாம். கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டியில் தமிழ்நாடு உருவான வரலாறு, மொழிவாரி மாகாணமும் தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டங்கள், தமிழகத்திற்காக உயிர் கொடுத்த தியாகிகள், முத்தமிழ் அறிஞர் கலைஞர் உருவாக்கிய நவீன தமிழ்நாடு, மொழிவாரி மாநிலம் உருவாக்கத்தில் தந்தை பெரியார்,எல்லைப் போர் தியாகிகள் உள்ளிட்ட தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றது.
இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு 10,000 ரூபாய் மற்றும் இரண்டாம் பரிசு 7000 ரூபாய், மூன்றாம் பரிசு 5000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதனைப் போலவே ஒவ்வொரு மாவட்டத்திலும் போட்டிகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.