ரயில்வேத்துறையில் பணியாற்றி ஓய்வு பெறும் 2320 அலுவலர்களுக்கும் ஒரே நேரத்தில் பணி நிறைவு விழா சிறப்பாக நடைபெற்றது.
ரயில்வே பணியில் ஓய்வு பெறும் வயதை நிறைவு செய்த அலுவலர்கள், பணியாளர்களுக்கு ரயில்வே அமைச்சகம் மெய்நிகர் பணிநிறைவு விழாவை சிறப்பாக நடத்தியது. நாடு முழுவதும் உள்ள ரயில்வேயின் அனைத்து மண்டல, கோட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு ஒரே தளத்தில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. வரலாற்றில், முதல் முறையாக சென்ற மாதம் ஜூலை 31ம் தேதி பணி நிறைவு செய்த 2320 அலுவலர்கள், பணியாளர்களுடன் ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் உரையாடினார். ரயில்வே துறை இணையமைச்சர், ரயில்வே வாரியத்தின் செயலாளர் மற்றும் மூத்த அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இந்த சிறப்பு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பியுஷ் கோயல், “இது மகிழ்ச்சியும் துயரும் தரும் நிகழ்ச்சியாகும். பணியாளர்கள் பல்வேறு இடங்களில், பல்வேறு பதவிகளில், பல்வேறு பொறுப்புகளில் இருந்து, நீண்டகாலமாக ரயில்வே துறையில் சேவை புரிந்தனர் என்பது மகிழ்ச்சி தருகிறது. ரயில்வே துறை சிறப்பாக இயங்குவதற்கு நீங்கள் செலுத்திய பங்களிப்பும் எதிர்காலத் தேவைக்கு ஏற்ப ரயில்வே மேம்படுவதில் நீங்கள் ஆற்றிய பணியும் எதிர்காலத்தில் நினைக்கப்படும். கடந்த சில ஆண்டுகளாக ரயில்வே துறை தங்களது பணியால் முன்னேற்றத்தை எட்டியுள்ளது.
கொரோனா பாதிப்பால் பொதுமுடக்கக் காலகட்டத்தில் சரக்கு ரயில் போக்குவரத்து, பார்சல் ரயில்கள், புலம்பெயர் மக்களை ஏற்றிச் செல்ல ஷ்ரமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இத்தகைய சமயத்தில் ரயில்வே துறையினர் நாட்டுக்குச் சிறப்பான சேவையை வழங்கினர். ரயில்வே பணியாளர்கள் கொரோனா போராளிகளுக்குச் சளைத்தவர்கள் அல்ல. கோவிட் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் பணியாளர்கள் ஆற்றிய சேவையை நான் மிகவும் பாராட்டுகிறேன்” என்று குறிப்பிட்டு கூறினார். “ரயில்வே துறையில் பணி ஓய்வு பெற்ற அலுவலர்களும், ஊழியர்களும் மத்திய அரசுப்பணியில் மிக நீண்ட அனுபவம் பெற்றவர்கள். அவர்கள் பொதுமக்களிடம் அரசின் கொள்கைகள், திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.
அதன் மூலம் அவர்கள் பலனடைவதுடன், தற்சார்புள்ளவர்களாகவும் ஆக முடியும். பொது மக்களின் வாழ்க்கை சிறப்பாக அமைவதற்கு அது பங்களிக்க இயலும்” என்றும் அமைச்சர் அறிவுறுத்தினார். ஜூலை 31ஆம் தேதி பணி நிறைவு செய்தவர்கள் ஆற்றிய சிறந்த பங்களிப்பை அவர் மிகவும் பாராட்டி, எதிர்கால வாழ்க்கைக்கு வாழ்த்து தெரிவித்தார். ரயில்வே அலுவலர்களும், பணியாளர்களும் ரயில்வே அமைச்சர் மற்றும் ரயில்வே இணையமைச்சர் ஆகியோருடன் கலந்துரையாடினர். பணிநிறைவு நிகழ்ச்சியை என்றும் நினைத்திருக்கும் வகையில் அமைத்ததற்காக நன்றி தெரிவித்துக் கொண்டனர். தாங்கள் என்றென்றும் ரயில்வே படையில் தொடர்ந்து நீடிப்போம் என்றும் கூறினர்.