இன்சூரன்ஸ் என்பது நிதி இழப்பிலிருந்து பாதுகாப்பதற்கான ஒரு வழிமுறையாகும். நீங்கள் அல்லது உங்களுடைய குடும்பத்தினர் சந்திக்கும் இழப்பிற்கு இன்சூரன்ஸ் போதுமான நிதி பாதுகாப்பை வழங்கும். எனவே காப்பீட்டு தொகையை தேர்ந்தெடுப்பதற்கு முன்னதாக உங்கள் தேவைக்கு ஏற்ப எவ்வளவு காப்பீடு எடுக்க வேண்டும் மற்றும் அதன் முக்கியத்துவம் என்ன ? என்பது பற்றி தெரிந்து கொள்ளுதல் அவசியம். பொதுவாக இன்சூரன்ஸ் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை லைஃப் இன்சூரன்ஸ் மற்றும் ஜெனரல் இன்சூரன்ஸ் ஆகும்.
லைஃப் இன்சூரன்ஸ் :-
பாலிசிதாரரின் வாழ்நாளை காப்பதே லைஃப் இன்சூரன்ஸ் ( ஆயுள் காப்பீடு). ஒருவேளை பாலிசிதாரர் இந்த பாலிசி காலத்திற்குள் மரணமடைந்துவிட்டால் பாலிசியின் நாமினிகளுக்கு காப்பீட்டு நிறுவனம் ஒரு உறுதியான தொகையை செலுத்தும். இந்தியாவில் பொதுவாக உள்ள ஆயுள் காப்பீட்டு கொள்கைகள்: கால ஆயுள் காப்பீடு, முழு ஆயுள் காப்பீடு, யூனிட்-லிங்க்டு இன்சூரன்ஸ் பிளான்ஸ், ஓய்வூதிய திட்டங்கள், எண்டோவ்மென்ட் திட்டங்கள், சைல்ட் பிளான்ஸ்.
ஜெனரல் இன்சூரன்ஸ் :-
இந்த பிரிவு வீடு, உடல்நலம், தீ மற்றும் பயணம், மோட்டார் ஆகிய அனைத்து லைஃப் இன்சூரன்ஸ் அல்லாத சொத்துக்களையும் உள்ளடக்கியது.
முதல்முறையாக இன்சூரன்ஸ் வாங்குபவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் :-
உங்கள் பட்ஜெட்டை சீரமைக்க வேண்டும் :-
குறைந்த பிரீமியத்தில் இன்று ஒருவரால் மலிவான விலையில் இன்சூரன்ஸ் பெற முடியும். தனது தேவைக்கு ஏற்ப ஒருவர் கவரேஜையும் தேர்வு செய்ய முடியும். எடுத்துக்காட்டாக எப்போதும் நீங்கள் தனியாக பயணம் மேற்கொள்பவர் என்றால், மோட்டார் வாகன காப்பீடு பெறும் போது உடன் வரும் பயணிகளுக்கான கவரேஜை தவிர்க்கலாம்.
உங்கள் தேவைகளை புரிந்து கொள்ளுங்கள் :-
உங்கள் வணிக வளாகத்தில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டுவிட்டால் தகுந்த இழப்பீடு கிடைக்க வேண்டுமா ? அல்லது நீங்கள் அகால மரணம் அடைந்தால் உங்களுடைய குடும்பத்திற்கு காப்பீடு கிடைக்க வேண்டுமா ? இவ்வாறு எதற்காக உங்களுக்கு காப்பீடு தேவை என்பதை மதிப்பிட்டுக் கொள்ளுங்கள். அதேபோல் முதலில் உங்களின் தேவை என்ன ? நீங்கள் லைஃப் டைம் இன்சூரன்ஸை தேடுகிறீர்களா ? அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கான இன்சூரன்ஸை தேடுகிறீர்களா ? என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
ஹெல்த் இன்சூரன்ஸ் முக்கியத்துவம் :-
இன்சூரன்ஸ் என்றாலே ஹெல்த் இன்சூரன்ஸுக்கு தான் முதல் முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஏனென்றால் அவசர நிலையின் போது பாலிசிதாரர்களுக்கு தகுந்த மருத்துவ சிகிச்சை பெறுவதற்கான திறனை ஹெல்த் இன்சூரன்ஸ் உறுதி செய்கிறது. மேலும் இது உங்கள் சேமிப்பு மற்றும் எதிர்கால வருமானத்தையும் பாதுகாக்கும்.
இன்சூரன்ஸை ஒரு புகழ்பெற்ற நிறுவனத்திடமிருந்து வாங்க வேண்டும் :-
இன்சூரன்ஸ் வாங்குபவர்கள் இன்சூரன்ஸ் பெறும் நிறுவனத்தின் க்ளெய்ம்ஸ் செட்டில்மென்ட் ரேஷியோவை சரி பார்க்க வேண்டும். ஒரு புகழ்பெற்ற நிறுவனத்திடம் இன்சூரன்ஸை வாங்குவதும், இன்சூரன்ஸ் பெறும்போது பிரீமியம் மற்றும் கவரேஜ்களுக்கான வெவ்வேறு விருப்பங்களை ஒப்பிட்டு பார்த்து வாங்குவதும் மிகவும் முக்கியம்.