பொதுத்துறை நிறுவனங்கள் படிப்படியாக தனியார் மயமாகி வருகிறது. இந்த நிலையில் வெகுவிரைவில் இந்தியன் ரயில்வேயும் தனியார் மயமாகும் என்று கூறுகிறார்கள். மேலும் முதல்முறையாக தமிழ்நாட்டில் தனியார் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, கோவையிலிருந்து ஷீரடிக்கு வாராந்திர ரயில் சேவையை கோவையைச் சேர்ந்த எம் அண்ட் சி என்ற நிறுவனம் விரைவில் தொடங்கவுள்ளது. கோவையிலிருந்து தனியாரால் இயக்கப்படும் முதல் ரயில் இது என்பது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஆண்டு முழுவதும் ஆன்மிகச் சுற்றுலா செல்கின்றனர். பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஷீரடிக்கு ரயில்களும் இயக்கப்படுகின்றன. ஆனால் கோவையிலிருந்து ஷீரடிக்கு நேரடி போக்குவரத்து வசதியில்லை. விமானம் மற்றும் ரயில்களில் மாறிச் செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இந்நிலையில் ஷீரடியில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து ரயில்கள் இயக்கப்படுகின்றன.
ஷீரடிக்கு 5 நகரங்களில் இருந்து தனியார் ரயில்களை இயக்குவதற்கு ரயில்வே துறை அனுமதி அளித்துள்ளது. இதில் கோவையும் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் மிகவும் தூய்மையாகவும், சர்வதேச தரத்திலான விருந்தோம்பலுடனும் இந்த ரயிலின் சேவை அமையும் என்று ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர். கடந்த ஏப்.,29லிருந்து இந்த ரயில் இயக்கப்படுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது மே 17ஆம் தேதியிலிருந்து இயக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.