Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

முதல் 5 ஓவரிலேயே முடிஞ்சு போச்சு….. “அடுத்த மேட்ச்ல பாப்போம்”….. தோல்விக்கு பின் பேசிய ஜிம்பாப்வே கேப்டன்..!!

இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தோல்வியுற்ற நிலையில், அடுத்த போட்டியில் நிச்சயம் நாங்கள் வலுவுடன் திரும்புவோம் என்று ஜிம்பாப்வே அணியின் கேப்டன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரின் முதல் போட்டி நேற்று ஹராரே மைதானத்தில் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே. எல்.ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணியால் இந்திய பந்துவீச்சாளர்களின் தாக்குதலில் நிலைத்து நிற்க முடியவில்லை. இறுதியில் ஜிம்பாப்வே அணி 40.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 189 ரன்களில் சுருண்டு போனது.

இதையடுத்து களம் இறங்கிய இந்திய அணி 30.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 192 ரன்கள் எடுத்து எளிதாக வென்றது. தவான் 113 பந்துகளில் 81 ரன்களும் (9 பவுண்டரி), சுப்மன் கில்  72 பந்துகளில் 82 ரன்களும் (10 பவுண்டரி, 1 சிக்ஸர்) எடுத்திருந்தனர். இந்த போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். தீபக் சாஹர் பிரசித் கிருஷ்ணா, அச்சர் பட்டேல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.. இந்த வெற்றியின் மூலம் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் போட்டியின் தோல்விக்கு பின் பேசிய ஜிம்பாப்வே அணியின் கேப்டன் ரெகிஸ் சகப்வா, இந்திய அணியின் பவுலர்கள் சிறப்பாக பந்து வீசினர். அவர்கள் போட்டியின் தொடக்கத்திலேயே எங்கள் மீது அழுத்தத்தை கொடுத்தனர். முதல் 4- 5 ஓவர்களிலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்து விட்டதால் அந்த இடத்திலேயே எங்களது தடுமாற்றம் தொடங்கிவிட்டது. அதன் பின் வந்த வீரர்கள் ஓரளவு சுதாரித்துக் கொண்டு ஆடினாலும் எங்களால் ஒன்று இரண்டு பெரிய பார்ட்னர்ஷிப்பை அமைக்க இயலவில்லை..

இதன் காரணமாக இந்த போட்டியில் நாங்கள் தோல்வியுற்றோம். இருப்பினும் இந்திய அணிக்கு எதிராக எங்களது பந்துவீச்சாளர்கள் சிறப்பாக போராடினர். ஆனாலும் இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடி எங்களிடமிருந்து வெற்றியை பறித்து விட்டனர். அடுத்த போட்டியில் நிச்சயம் நாங்கள் வலுவுடன் திரும்புவோம் என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |