முதியோர்களுக்கு பிபிஇ கிட் மற்றும் முகக் கவசங்கள் வழங்கப்பட வேண்டுமென புது டெல்லி உச்சநீதிமன்றத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த வழக்கறிஞருமான அஸ்வனி குமார் உச்ச நீதிமன்றத்தில் கொரோனா காலத்தில் முதியோர்களுக்கு தேவைப்படும் மருத்துவ வசதிகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை வழங்குவதற்கான பொதுநல வழக்கை தொடர்ந்துள்ளார். அவர் கொடுத்த மனு நீதிபதி அசோக் பூஷண் தலைமையில் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணைக்கு மத்திய அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.மோகனா, “இது குறித்து மாநில அரசுகள் ஏற்கெனவே முயற்சி மேற்கொண்டுள்ளன. இது ஒரு எதிர்மறையான பிரச்சினை அல்ல. பதில் மனு தாக்கல் செய்ய ஒரு வாரம் அவகாசம் அளிக்க வேண்டும்” என்று அவர் கூறினார். மேலும் இதுகுறித்து அஸ்வனி குமார் கூறுகையில், “இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை அவசியம்”என்று கூறினார்.
பாரபட்சம் பாராமல் முதியோருக்காக கொரோனா சிகிச்சை கோரிய மற்றொரு மனுவையும் அசோக் பூஷன் தலைமையில் நீதிபதிகள் விசாரித்தனர். இது தொடர்பாக நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “நாடு முழுவதிலும் முதியோர் இல்லங்களில் உள்ளவர்களுக்கு உரிய நேரத்தில் ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். மேலும் கொரோனா பாதுகாப்பு கவச உடைகள் (பிபிஇ கிட்), கிருமி நாசினி மற்றும் முகக் கவசங்கள் வழங்கபட வேண்டும். முதியோரிடம் இருந்து வரும் கோரிக்கைகளுக்கு அரசு நிர்வாகம் காது கொடுக்க வேண்டும். முதியோர் விவகாரத்தில் கடந்த 2018 டிசம்பரில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை தற்போதைய தொற்று நோய் காலத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும். இது தொடர்பாக மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்” என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.