முதுமலையில் அட்டகாசம் செய்த புலி திடீரென உயிரிழந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலையில் இருக்கும் புலிகள் காப்பகத்தில் சென்ற 2 நாட்களுக்கு முன்பாக ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான ஆட்டை புலி ஒன்று கடித்துக் கொன்று அட்டகாசம் செய்தது. இதன்பின் விவசாயிகள் அங்கு ஓடி வந்து புலியை விரட்டினார்கள். இதுகுறித்து விவசாயிகளில் தெரிவித்ததாவது, புலி மிகவும் உடல் மெலிந்த நிலையில் காணப்பட்டதாகவும் வேட்டையாட முடியாத நிலையில் ஆட்டை கடித்துக் கொன்றதாகவும் தெரிவித்தார்கள். இது குறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் விசாரணை நடத்தினார்கள்.
மேலும் கூண்டு வைத்து புலியை பிடிக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினார்கள். இதனால் புலியை பிடிக்க வனத்துறையினர் கண்காணித்து வந்த நிலையில் கிராமத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் 11 வயதான பெண் புலி இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு நேற்று தகவல் வந்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற வனத்துறையினர் புலியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்தார்கள். இதன் பின் அப்பகுதியில் புலியின் உடல் தீ வைத்து எரிக்கப்பட்டது இது பற்றி வனத்துறையினர் கூறியுள்ளதாவது, வயது முதிர்வு காரணமாக அந்த புலி உயிரிழந்திருக்கலாம் என எண்ணப்படுகின்றது. இது குறித்து முழு விவரம் சொல்ல வேண்டும் என்றால் பிரேத பரிசோதனைக்கு பிறகே தெரிவிக்கப்படும் என கூறியுள்ளார்.