ஒருவருக்கொருவர் வாயோடு வாய் சேர்த்து முத்தம் கொடுப்பதால் தொண்டையில் வெட்டை நோய் தொற்று ஏற்படும் ஆபத்து இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலகிலுள்ள தம்பதியினர் தங்களுக்குள் முத்தம் கொடுப்பது வழக்கம். ஆனால் அண்மைகாலமாக தொண்டை வெட்டை நோய் எனப்படும் பால்வினை தொற்று நோய் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். உடல் உறவின் மூலம் மட்டுமல்லாமல், முத்தத்தால் கூட இந்த நோய் பரவுவது உறுதியாகியுள்ளது. இது தம்பதியரை விட தன்பாலின மற்றும் இருபாலின உறவில் ஈடுபடும் ஆண்களை தான் அதிகம் தாக்குகிறது. இந்தியாவில் ஆண்டுதோறும் வயது வந்தோரில் 6 சதவீதம் பேர் பால்வினை நோய்த் தொற்றுகளால் பாதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாயோடு வாய் சேர்த்து நாக்கை தொட்டு இடும் முத்தத்தால் தொண்டையில் வெட்டை நோய் என்ற பால்வினை நோய் தொற்று ஏற்படும் ஆபத்து உள்ளது. இந்த நோய் தொண்டை, பிறப்புறுப்பு, மலக்குடலில் தொற்று ஏற்படுத்தும். இதை தடுக்க முத்தமிடுவதை தவிர்ப்பது நடைமுறையில் இயலாதது. ஆனால் கட்டுப்பாட்டுடன் ஒழுக்கத்தைக் கடைப் பிடித்தால் இதை தவிர்க்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.