முத்துமலை முருகன் கோவில் திருக்கல்யாண உற்சவ விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சேலம் மாவட்டம், புத்திர கவுண்டன்பாளையத்தில் உலகிலேயே மிக உயரமான முத்துமலை முருகன் சிலை அமைந்துள்ளது. இந்த சிலையின் உயரம் 146 அடி. இந்த முருகன் சிலைக்கு நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவின்போது ஹெலிகாப்டர் மூலம் முருகன் சிலைக்கு மலர் தூவப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று முருகனுக்கு வள்ளி, தெய்வானையுடன் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
இந்த திருக்கல்யாண உற்சவத்தில் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சீர்வரிசை பொருட்கள் ஊர்வலமாக கொண்டு வந்து திருமாங்கல்யம் வைக்கப்பட்டு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த உற்சவ விழா நிறுவனர் ஸ்ரீதர் மற்றும் அவரது குடும்பத்தினர் தலைமையில் நடந்தது. அதன்பின் பல்லக்கில் சாமி திருவீதி உலா வந்தது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமியை வழிபட்டு வந்தனர்.