ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள மேல் புளியங்குடி, குணமங்கலம், ரெட்டிபாளையம், அக்ரஹாரம் போன்ற பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் பயிர்களை சாகுபடி செய்து இருக்கின்றனர். இந்த நிலையில் பகலில் 6 மணி நேரமும் இரவில் 6 மணி நேரமும் வழங்கப்பட்ட மும்முனை மின்சாரம் எந்தவிதமான அறிவிப்பும் இல்லாமல் கடந்த சில வாரங்களாக இரவில் இரண்டரை மணி நேரமும் பகலில் இரண்டரை மணி நேரமும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் எந்த நேரத்தில் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று முறையாக அறிவிக்கப்பட்டால் விவசாயிகள் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
நன்கு வளர்ந்த நெற்பயிர்கள் மின்தடையால் தங்கள் கண்முன்னே கருகுவதை கண்டு விவசாயிகள் கண்ணீர் சிந்தினர். இது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் அவர்கள் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் மின் அதிகாரிகளின் அலட்சிய போக்கை கண்டித்து நேற்று கருகிய நெற்பயிர்களை எடுத்துக்கொண்டு ஸ்ரீமுஷ்ணம் மின்வாரிய அலுவலகம் முன்பு திரண்டு வந்துள்ளனர். அதன்பின் அவர்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உடனே அங்கிருந்த மின்வாரிய அதிகாரிகள் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.
அப்போது அவர்கள் ஸ்ரீமுஷ்ணம் துணை மின் நிலையத்தில் உள்ள மின் மாற்றி ஏற்பட்ட பழுதால் தற்காலிகமாக இந்த மின்தடை ஏற்பட்டு இருக்கின்றது. மின்மாற்றியில் 20,000 லிட்டர் ஆயில் மாற்றி அதன் மூலமாக இயக்கி அந்த ஆயிலை சென்னைக்கு ஆய்வுக்கு அனுப்பி பழுது நீக்க அவகாசம் தேவைப்படுகின்றது. மேலும் இன்னும் ஓரிரு தினங்களில் மின்தடை சரி செய்யப்படும் என உறுதி அளித்துள்ளனர். அதனை ஏற்றுக் கொண்ட விவசாயிகள் முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.