சென்னை-சேலம் பசுமை வழி சாலை திட்டத்தை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகாவில் வைத்து போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் முன்னாள் எம்எல்ஏ டில்லிபாபு போராட்டத்திற்கு பிறகு சக கட்சியினருடன் சேர்ந்து ஒரு ஹோட்டலில் உணவருந்தி உள்ளார். அப்போது திடீரென வந்த செங்கம் டிஎஸ்பி சுந்தரமூர்த்தி உதவி ஆய்வாளர்கள் முத்துக்குமாரசாமி மற்றும் ராஜசேகர் ஆகியோர் முன்னாள் எம்எல்ஏ டில்லிபாபுவை லத்தியால் சரமாரியாக தாக்கியும் தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளனர். இதனைத் தொடர்ந்து டில்லிபாபுவை புதுப்பாளையம் காவல்நிலையத்தில் சிறை வைத்துள்ளனர்.
போலீசாரின் இந்த மனித உரிமையை மீறிய செயல் தொடர்பாக மனித உரிமைகள் ஆணையத்தில் டில்லிபாபு சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த மனித உரிமை ஆணைய தலைவர் 10 ஆண்டுகள் எம்எல்ஏவாக இருந்த டில்லிபாபுவை போலீசார் விசாரணை நடத்திய விதம் தொடர்பாக அதிருப்தி தெரிவித்ததுடன் முன்னாள் எம்எல்ஏ டெல்லி பாபுவுக்கு ஒரு லட்சம் நிவாரணமாக வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி 50 ஆயிரம் ரூபாய் டிஎஸ்பி இடமிருந்தும் 55 ஆயிரம் ரூபாய் உதவி ஆய்வாளர்களிடமிருந்து தலா 25 ஆயிரமாக பெறப்பட்டு முன்னால் எம்எல்ஏவுக்கு அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.