முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கக் கூடாது என்ற உத்தரவை நீடிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பணம் மோசடி செய்ததாக அதிமுக பிரமுகரான விஜய் நல்லதம்பி புகார் அளித்திருந்தார். இந்த புகார் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வருவதற்கு, முன்பாகவே உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் பணத்தை இழந்தவர்கள் விஜய்யை நல்லதம்பியிடமே பணத்தை கொடுத்ததாகவும், எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் புகார் அளிக்கப்பட்டது என்று கூறி, இந்த வழக்கில் என்னை கைது செய்யாமல் இருப்பதற்கு முன்ஜாமீன் வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கை கடந்த 5 நாட்களுக்கு முன்பு விசாரணை செய்த நீதிபதிகள், இந்த புகார் தொடர்பாக ராஜேந்திர பாலாஜியை கைது செய்யக்கூடாது என்று தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று உத்தரவு நீட்டிக்கப்படுவதாகவும், காவல்துறை தரப்பு வாதத்திற்காக வழக்கு விசாரணை வரும் 30ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாகவும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.