வங்காள தேசத்தின் முன்னாள் பிரதமரின் தண்டனை குறித்து அந்நாட்டின் ஷேக் ஹசீனா அரசு பரிசீலினை செய்து வருகிறது.
வங்காள தேசத்தின் முன்னாள் பிரதமரான கலிதா ஜியா மூன்று முறை பிரதமராக பதவி வகித்தவர். இவர் மீது ஊழல் வழக்கு போடப்பட்டதால் கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதி இவருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அவரது உடல்நிலையை காரணம் காட்டி கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஜாமீன் மனு வழங்கப்பட்டது. அந்த ஜாமீன் செப்டம்பர் முதல் 6 மாத காலத்திற்கு நீட்டிக்கப்பட்டது. தற்போது அந்த ஜாமீன் வருகின்ற 25 ஆம் தேதி முடிகிறது. இந்நிலையில் அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என வங்காளதேசத்தில் ஷேக் ஹசினா அரசு பரிசீலினை செய்துள்ளது.
இது குறித்து அந்நாட்டின் உள்துறை அமைச்சர் அசதுஸ்ஸாமான் கான் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் முன்னாள் பிரதமரான கலிதா ஜியாவின் தண்டனையை ரத்து செய்வதும், தண்டனையிலிருந்து விடுவிப்பதும் குறித்து சட்ட அமைச்சகத்துடன் கலந்து முடிவு செய்யப்படும் என கூறியுள்ளார். மேலும் அவரது சகோதரர் அனுப்பிய கடிதத்தை கருத்தில் கொண்டு சட்ட அமைச்சகத்தில் ஆலோசனை செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார். எனவே கலிதா ஜியாவின் தண்டனை கிடைக்குமா, ரத்தாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.