ஜோலார்பேட்டை அருகே விபத்தில் இறந்த முன்னாள் ராணுவ வீரரின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என அவரின் மனைவி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை அடுத்திருக்கும் புள்ளானேரி புதூர் பகுதியை சேர்ந்த ரஜினி ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றார். இவரின் மனைவி ஜெயஸ்ரீ. இத்தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றார்கள். சென்ற மாதம் 20-ம் தேதி ஆம்பூர் பகுதியில் இருக்கும் ராணுவ கேண்டினைக்கு வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் குடியானகுப்பம் அண்ணாமலை தெருவில் வந்த பொழுது நிலைத்தடுமாறி கீழே விழுந்து ரஜினி காயம் அடைந்தார்.
இதனால் அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்கள். பின் மேல் சிகிச்சைக்காக சென்ற 22 ஆம் தேதி சென்னை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதை அடுத்து அவரின் உடல் சின்னகுட்டுர் சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. இதை அடுத்து அவரின் மனைவி ராணுவத்தில் பென்ஷன் பெறுவதற்காக தகவல் தெரிவித்தார்.
அப்பொழுது முன்னாள் ராணுவ வீரரின் பென்ஷன் மனைவி பெயருக்கு மாற்றி தருவதற்கு பிரேத பரிசோதனை அறிக்கை இருந்தால் தான் முடியும் என கூறியிருக்கின்றனர். இதனால் ஜெயஸ்ரீ ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் தனது கணவரின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என கூறி இருக்கின்றார். அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராணுவ வீரரின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்படும் என கூறினார்கள்.