பஞ்சாப் மாநில முன்னாள் எம்எல்ஏ-க்கள் 2 முறை எம்எல்ஏவாக இருந்தவர்களாக இருந்தாலும், 5 அல்லது 10 முறை எம்எல்ஏவாக இருந்தாலும் இனி அவர்களுக்கு ஒருமுறை எம்எல்ஏவாக இருந்ததற்கான ஓய்வூதியம் மட்டுமே வழங்கப்படும் என்று வீடியோ மூலம் பகவந்த் மான் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் இப்போது நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும் சில பேர் முன்னாள் எம்எல்ஏ-க்களுக்கான ஓய்வூதியப் பலனை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு சேமிக்கப்படும் பணம் மாநில மக்களின் நல்வாழ்வுக்காக செலவிடப்படும் என அறிவித்துள்ளார்.
நம் அரசியல் தலைவர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட, மக்களிடம் கைகூப்பி வாக்கு கேட்கும்போது உங்களுக்கு சேவை செய்ய எங்களுக்கு வாக்களியுங்கள் என்று தான் கேட்கிறார்கள். ஆனால் வாக்களித்த மக்களே உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும், பெரும்பாலான எம்எல்ஏ-க்கள் 3 அல்லது 4, 5 முறை எம்எல்ஏவாக இருந்தவர்கள் தேர்தலில் தோல்வி அடைந்தாலோ, கட்சியே போட்டியிட அனுமதிக்காவிட்டாலும் கூட அவர்களுக்கு மாத ஓய்வூதியமாக பல லட்சம் ரூபாய் பணம் கிடைக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
சில பேருக்கு ரூபாய் 3.50 லட்சம், சில முன்னாள் எம்எல்ஏ-க்ளுக்கு ரூபாய் 4.50 லட்சம், மேலும் சிலர் ரூ.5.50 லட்சம் அளவுக்கு ஓய்வூதியம் வாங்குகிறார்கள். இதன் காரணமாக மாநில அரசுக்கு மிகப்பெரிய பொருளாதார சுமை ஏற்படுகிறது. அத்துடன் இவர்களுக்கான குடும்ப ஓய்வூதியமும் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதனால் அனைத்து முன்னாள் எம்எல்ஏ-க்களுக்கும் ஒருமுறை எம்எல்ஏக்களாக இருந்தவர்களுக்கு வழங்கப்படும் ரூபாய் 75 ஆயிரம் மட்டுமே ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும்.