புதிய கோவிட் மாறுபாடு தொற்றின் காரணமாக பிரித்தானியாவுக்குள் நுழைய தடைசெய்யப்பட்ட நாடுகளின் “சிவப்பு பட்டியலில்” தற்போது இந்தியா சேர்க்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 23-ம் தேதி பிரித்தானிய நேரப்படி அதிகாலை 4 முதல் பயணத் தடை அமலுக்கு வருகிறது. கடந்த 10 நாட்களில் இந்தியாவிற்கு பயணம் செய்த மக்கள் அல்லது இந்தியாவிலிருந்து சென்றவர்கள் பிரித்தானியாவுக்குள் நுழைவதற்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய குடியுரிமை உள்ளவர்கள் அல்லது பிரிட்டிஷ் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் பத்து நாட்களுக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டலில் தனிமைப் படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிவேகமாக பரவி வரும் ரெட்டை மரபணு என்று அழைக்கப்படும் “B.1.617” உருமாற்றம் அடைந்த கொரோனா தொற்றால் இதுவரை 103 பேர் பிரித்தானியாவில் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் கூறியுள்ளார்.
இந்நிலையில் புதிய கொரோனா தொற்றான “B.1.617” தற்போது செலுத்தப்படும் தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகளுக்கு கட்டுப்படுமா அல்லது அதைவிட வேகமாக பரவுமா என்பதை அறிந்து கொள்வதற்காக சோதனை மாதிரிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அந்த ஆய்வு தரவுகளை படித்து பார்த்த பிறகு இந்தியாவை சிவப்பு பட்டியலில் ஒரு முன்னெச்சரிக்கை அடிப்படையில் சேர்த்துள்ளனர். இதனையடுத்து மாறுபாடு அடைந்த வைரஸின் பரவலை தடுக்க நான்கு மாதங்களுக்கு முன்னர் தான் அந்த நாட்டிலிருந்து வரும் விமானங்களை இந்தியா தடை செய்தது. இப்போது பிரித்தானியா “இந்திய வேரியண்ட்” பரவுவதை தடுக்க பயணத் தடை விதித்துள்ளது.