Categories
லைப் ஸ்டைல்

முன்னெச்சரிக்கை… புயல், மழையின்போது மின் விபத்துகளைத் தடுப்பது எப்படி? – பொதுமக்கள் கவனத்திற்கு…

மழைக் காலங்களில் பொதுமக்கள் தங்களது வீடுகளில் மின் விபத்துகள் ஏற்படாமல் தவிர்ப்பதற்கு கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து தமிழ்நாடு அரசு மின் ஆய்வுத் துறை பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.

தமிழ்நாடு அரசு மின் ஆய்வுத்துறை வழங்கியுள்ள அறிவுரை

  • ஐ.எஸ்.ஐ. முத்திரைப் பெற்ற தரமான மின் சாதனங்களை மட்டுமே, பயன்படுத்த வேண்டும்.
  • மின்சார விளக்குகளைப் பொருத்துவதற்கு முன்னரும், எடுப்பதற்கு முன்னரும் சுவிட்சை ஆப் செய்ய வேண்டும்..
  • ரெப்ரிஜிரேட்டர், கிரைண்டர் போன்ற வீட்டு உபயோக மின் சாதனங்களுக்கு நில இணைப்புடன்கூடிய மூன்று பின் சாக்கெட் உள்ள பிளக்குகள் மூலமாக மட்டுமே மின் இணைப்பு கொடுங்கள்.
  • ஈ.எல்.சி.பி.,யை வீடுகளில், மெயின் ஸ்விட்ச் போர்டில் பொருத்தினால், மின் கசிவால் ஏற்படும் விபத்தை தவிர்க்கலாம். உடைந்த சுவிட்சுகளையும், பிளக்குகளையும் உடனே மாற்றி விட வேண்டும். பழுதுபட்ட மின்சாதனங்களை உபயோகிக்கக் கூடாது.
  • ஒவ்வொரு வீட்டிற்கும் சரியான நில இணைப்பு (எர்த் பைப்) போடுவதுடன் அதனைக் குழந்தைகள் மற்றும் விலங்குகள் தொடாத வகையில் அமைத்து சரியாகப் பராமரிக்கவும்.
  • ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை உங்கள் வீட்டின் வயரிங்குகளைச் சோதனைசெய்து தேவைப்பட்டால் மாற்றிக் கொள்ளுங்கள்.
  • மின் இணைப்பிற்கு கூடுதலாக வயர்களை உபயோகிக்கும்போது அவைகளில் ஏதும் பழுதுகள் ஏதும் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • மின் கம்பத்திலோ அவற்றைத் தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளைக் கட்டாதீர்கள்.
  • மழைக் காலங்களில் மின்மாற்றிகள், மின்கம்பங்கள், மின்பகிர்வுப் பெட்டிகள், சேஃப்டி வயர்கள் ஆகியவற்றின் அருகே செல்லாதீர்கள்.
  • விவரங்களுக்கு மின்சார வாரியம் மற்றும் மின்சார ஆய்வுத் துறை அலுவலர்களை அணுகவும்.
  • தமிழ்நாடு மின்வாரிய மின் மாற்றிகள் மற்றும் துணைமின் நிலையத்திற்காகப் போடப்பட்டுள்ள வேலியின் அருகில் சிறுநீர் கழிக்கச் செல்லாதீர்கள்.
  • மின் வாரியத்தின் மேல்நிலை மின்சார கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு மின்சார வாரியத்தின் அலுவலர்களை அணுகவும்.
  • அவசர நேரங்களில் மின் இணைப்பினைத் துண்டிக்கும்வகையில் மின் கருவிகளின் சுவிட்சுகள் இருப்பிடம் அமைய வேண்டும்.
  • மின்சார தீ விபத்துக்களுக்குண்டான தீயணைப்பான்களை மட்டுமே மின்சாதனங்களில் தீவிபத்து ஏற்படும்போது பயன்படுத்த வேண்டும்.
  • உலர்ந்த மணல், கம்பளிப் போர்வை, உலர்ந்த ரசாயனப் பொடி அல்லது கரியமில வாயு ஆகிய தீயணைப்பான்களைப் பயன்படுத்தவும்.
  • மின்சாரத்தினால் ஏற்பட்ட தீயினை தண்ணீர் கொண்டு அணைக்க முயற்சிக்க வேண்டாம்.
  • தீ விபத்து மின்சாரத்தினால் ஏற்பட்டது எனில், உடனே மெயின் ஸ்விட்சை அணைத்துவிட வேண்டும்.
  • இடி அல்லது மின்னலின்போது உடனடியாக கான்கிரீட் கூரையிலான பெரிய கட்டடம் வீடு போன்ற பெரிய கட்டடங்களிலோ, உலோகத்தால் மேலே மூடப்பட்ட பேருந்து, கார், வேன் போன்ற வாகனங்களிலோ தஞ்சமடையுங்கள்.
  • இடி அல்லது மின்னலின்போது தஞ்சம் அடைய அருகில் எதுவும் இல்லாதபட்சத்தில், மின் கம்பிகள், மின் கம்பங்கள், மரங்கள், உலோகக் கம்பி வேலி போன்றவை இல்லாத தாழ்வான பகுதிகளைத் தேர்ந்தெடுங்கள்.
  • திறந்தநிலையில் உள்ள ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகில் இருக்காதீர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |