மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மருத்துவ நலத்துறை சார்பில் சுகாதார பேரவை கூட்டம் நடைபெற்றுள்ளது.
தேனி மாவட்டம் மருத்துவ நலத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் சுகாதார பேரவை கூட்டம் பழனிசெட்டிபட்டியில் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமை தாங்கியுள்ளார். அப்போது ஆட்சியர் பேசும்போது, மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தியதால் 80% பிரசவங்கள் அரசு மருத்துவமனையிலே நடப்பதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அனைத்து கிராமங்களிலும் மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து அவர்களின் உதவியுடன் கிராமப்புற மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு சுகாதார பேரவைகுழு அமைக்கப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து பள்ளிகள், ஊட்டசத்து மையங்கள், உள்ளாட்சி அமைப்புகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் தேனி மாவட்டத்தை சுகாதார முன்னோடி மாவட்டமாக மாற்றுவதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ கம்பம் ராமகிருஷ்ணன், மாகாராஜன், சரவணக்குமார், ஊரக வளர்ச்சி முகமாய் திட்ட இயக்குனர் தண்டபாணி, மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் லட்சுமணன், தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் பாலாஜிநாதன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ஜெகவீரபாண்டியன் என அரசு அதிகாரிகள் பலரும் பங்கேற்றுள்ளனர்.