முன்மாதிரி கிராம விருதுக்காக சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் ஊராட்சிகளை தேர்வு செய்ய குழு அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்ட்டுள்ளது.
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் கிராமங்களுக்கு முன்மாதிரி கிராம விருது வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். இதற்கான அரசாணையையும் 2 நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இந்த அரசாணையில் சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் கிராமங்களை ஊக்குவிக்கும் வகையில் விருது உருவாக்கப்பட்டு மாவட்டத்திற்கு ஒரு கிராம ஊராட்சி என்ற அடிப்படையில் 37 கிராம ஊராட்சிகளுக்கு இந்த விருது கொடுத்து, இதற்கான விருதும், கேடயமும் தலா 7.50 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும் மாவட்ட அளவிலான விருதுகளுடன் சிறப்பாக செயல்படும் மூன்று ஊராட்சிகளுக்கு மாநில அளவில் முன்மாதிரி கிராம விருது வழங்கி அதற்கான கேடயமும், தலா 15 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படும் என்று அந்த அரசாணையில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் முன்மாதிரி கிராம விருதுகளுக்காக சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் ஊராட்சிகளை தேர்வு செய்ய குழு அமைத்து அரசாணை வெளியிட்டுள்ளது.
மாநில அளவில் ஊரக வளர்ச்சி இயக்குனர் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவும், மாவட்ட அளவில் மாவட்ட கலெக்டர் தலைவராகக் கொண்ட ஒரு குழுவும், வட்டார அளவில் வட்டார வளர்ச்சி அலுவலரை தலைவராகக் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட உள்ளது. இது தவிர 37 மாவட்டங்களில் தலா ஒரு கிராம ஊராட்சிக்கு முன்மாதிரி கிராம விருது வழங்குவதற்கும், சிறப்பாக செயலாற்றும் மூன்று ஊராட்சிகளுக்கு மாநில அளவில் விருது வழங்குவதற்கும் மொத்தம் 3 கோடியே 22 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்குவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.