மணல் கடத்தலில் ஈடுபட்ட அதிமுக பிரமுகரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி விசிக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது
அரக்கோணம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோவளத்தில் தேர்தலுக்கு பின்பு இரட்டைக் கொலை நடைபெற்றது. குறிப்பாக கோவளத்தில் உள்ள அதிமுக பிரமுகர் ஒருவர் மணல் கடத்தலில் ஈடுபட்டுள்ளார். இதனை அப்பகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தட்டிக் கேட்டுள்ளனர். அதுமட்டுமின்றி தேர்தல் பிரச்சாரத்தின் போது அதிமுக வேட்பாளரை அவர்களது ஊருக்குள் இளைஞர்கள் அனுமதிக்கவில்லை. இந்த முன்விரோதம் காரணமாக இரண்டு நாட்களுக்கு முன்பு இரட்டைக் கொலை நடைபெற்றுள்ளது.
இதனை கண்டித்து தற்போது விசிக கட்சியின் சார்பாக தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதனிடையே வள்ளுவர்கோட்டத்தின் அருகே நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டத்தில் விசிக கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை ஏற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார். கண்டன முழக்கங்களுடன் நடைபெறும் இந்தப் போராட்டத்தின் முக்கிய கோரிக்கை மணல் கடத்தலில் ஈடுபட்டு வரும் அதிமுக பிரமுகரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்பதே ஆகும்.