சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே தி.மு.க.-அ.தி.மு.க.வினர் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 26 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள வயல்சேரி கிராமத்தில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட துணை செயலாளராக அதிமுக ஜெயலலிதா பேரவையில் உள்ளார். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்கு சேகரிப்பதில் திமுகவினரும், இவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் தேர்தலன்று ராமகிருஷ்ணன் வயல்சேரியில் உள்ள ரேஷன் கடை முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது ராமகிருஷ்ணனின் கார் கண்ணாடியை அங்கு வந்த திமுக ஆதரவாளர்கள் இரும்பு கம்பியால் உடைத்துள்ளனர். அதை எதிர்த்து கேள்வி கேட்ட ராமகிருஷ்ணனை அவர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ராமகிருஷ்ணன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் அதே பகுதியை சேர்ந்த பாலகணேஷ், லட்சுமணன் உட்பட 8 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் திமுகவை சேர்ந்த சக்திவேல் மற்றும் அவரது மனைவி முத்துலட்சுமி ஆகியோரை ராமகிருஷ்ணன் மற்றும் சிலர் கடந்த 7-ஆம் தேதி உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து சக்திவேல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் ஈஸ்வரன், ராமகிருஷ்ணன் உட்பட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே சிலர் மண்வெட்டியால் ராமகிருஷ்ணனின் தந்தை நாராயணன் என்பவரை தாக்கியுள்ளனர். இதுகுறித்து ராமகிருஷ்ணன் மனைவி பிரியா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் பழையனூர் காவல்துறையினர் மோகன், சக்திவேல் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மொத்தம் 3 புகார்களையும் சேர்த்து 26 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.