முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் பெண்ணை பாட்டிலால் தாக்கிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையை அடுத்துள்ள பனிச்சகுடி கிராமத்தில் செல்வமணி என்பவர் வசித்து வந்துள்ளார். தொழிலாளியான இவருக்கு காளியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கருணாநிதி என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனையடுத்து கருணாநிதியின் மாடுகள் காளியம்மாளின் வயலில் மேய்ந்து கொண்டிருந்துள்ளது. எனவே காளியம்மாள் கருணாநிதியை கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கருணாநிதி காளியம்மாளை தகாத வார்த்தைகளால் பேசியதோடு மட்டுமல்லாமல் அருகே கிடைத்த உடைந்த பாட்டில் துண்டுகளை எடுத்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதுகுறித்து காளியம்மாள் அளித்த புகாரின் அடிப்படையில் எஸ்.பி.பட்டினம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து கருணாநிதியை கைது செய்துள்ளனர்.