முன்விரோதம் காரணமாக சமையல் தொழிலாளியை கொலை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள அபிராமம் நத்தம் அண்ணா நகரில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். சமையல் தொழிலாளியான இவர் அதே பகுதியை சேர்ந்த குமரன் என்பவரை வேலைக்கு அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் வேலை முடித்ததும் குமரனுக்கு சம்பளம் கொடுத்துள்ளார். அப்போது இந்த சம்பளம் போதாது என முருகனிடம் தகராறு செய்துள்ளார்.
இதனையடுத்து ஒருவழியாக இருவரும் வாக்குவாதத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். இதனைதொடர்ந்து நேற்று முன்தினம் முருகன் அவரது வீட்டிற்கு அருகே நடந்து சென்றுகொண்டிருந்தபோது குமரன் திடீரென வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் முருகனை தகாத வார்த்தைகளால் பேசி தகராறில் ஈடுபட்ட குமரன் ஆத்திரமடைந்து அருகே இருந்த கால்லால் தாக்கியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த முருகனை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே முருகன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து முருகனின் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் அபிராமம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து குமரனை கைது செய்த நிலையில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.