கட்டிட தொழிலாளியை கல்லால் அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிங்கம்பூண்டி கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கன்னியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இந்நிலையில் வெங்கடேசனும் அதே கிராமத்தில் வசிக்கும் ராஜாவும் கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கடந்த 27-ஆம் தேதி வெங்கடேசன் அங்குள்ள பேருந்து நிலையம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு மறைந்திருந்த ராஜா வெங்கடேசனை சிமெண்டு கல்லால் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த வெங்கடேசன் வலி தாங்க முடியாமல் அலறியுள்ளார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து வெங்கடேசனை மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதன் பின் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து கொலை வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.