இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் நவராத்திரி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப் படுகிறது. அந்த வகையில் நடப்பாண்டிலும் நவராத்திரி பண்டிகை கடந்த திங்கட்கிழமை தொடங்கப்பட்டுள்ளது. இந்த நவராத்திரி பண்டிகையின் போது துர்கா, லட்சுமி மற்றும் சரஸ்வதி தேவிகளை வழிபடுவது வழக்கம். இந்த முப்பெரும் தேவிகளை நவராத்திரியின் 9 தினங்களுக்கும் விரதம் இருந்து பக்தியோடு பூஜித்து நெய்வேத்தியம் படைத்து வழிபட்டால் நன்மைகள் பெருகும் என்பது ஐதீகம். இந்நிலையில் நவராத்திரி பண்டிகையின் போது கோவில்கள் மற்றும் வீடுகளில் கொலு வைப்பது வழக்கம்.
இந்த கொலு பொம்மைகளை படிகள் அமைத்து வைப்பதால் வாழ்க்கையில் படிப்படியான முன்னேற்றங்களை அடையலாம் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு நவராத்திரி பண்டிகையின் 9 நாட்களிலும் அன்னையை காலை, மாலை இரு வேளைகளிலும் பக்தி பாடல்களை பாடி பூஜை செய்து மகிழ்விக்க வேண்டும். முப்பெரும் தேவிகளை சக்தி வடிவங்களாக பிரித்து இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்று அழைப்பார்கள். அதோடு மலை மகள், அலை மகள், கலைமகள் எனவும் முப்பெரும் தேவிகள் அழைக்கப்படுகின்றனர்.
இதில் மலைமகளாகவும், இச்சா சக்தியாகவும் அழைக்கப்படும் துர்கா தேவி வீரத்தை அருள்பவளாகவும், அலை மகளாகவும் (திருமகள்), கிரியா சக்தியாகவும் அழைக்கப்படும் லட்சுமி தேவி செல்வத்தை அருள்பவளாகவும், கலை மகளாகவும், ஞான சக்தியாகவும் அழைக்கப்படும் சரஸ்வதி தேவி ஞானத்தை அருள்பவளாகவும் இருக்கிறாள். இப்படி நமக்கு வீரம், செல்வம் மற்றும் கல்வி போன்றவற்றை வழங்கும் முப்பெரும் தேவிகளை நவராத்திரி பண்டிகையின் போது வழங்குவது மிக சிறப்பு என்று கூறப்படுகிறது.