மும்பையில் மீண்டும் அடுத்த ஒரு வாரத்திற்கு கன மழை கொட்டி தீர்க்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மும்பையில் சென்ற திங்கட்கிழமை தொடங்கி, 3 நாட்களாக பெய்து வந்த தொடர் கனமழையால் நகர மக்கள் பாதிப்பை சந்தித்து வந்தனர். அதன்பின் வியாழக்கிழமை முதல் மழை குறையத் தொடங்கியது. மும்பையில் ஆகஸ்ட் மாதத்தில் வழக்கமாக 58.52 செ.மீ. மழை தான் பெய்யும். ஆனால் கடந்த 7 நாட்களில் மட்டும் அதைவிட அதிகமான கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. அதாவது கடந்த 1-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை மும்பையில் 59.76 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
இந்நிலையில் மும்பையில் மீண்டும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மும்பை வானிலை ஆய்வு மைய துணை இயக்குநர் ஜெனரல் ஹோசிலிகர் கூறுகையில், “தென்மேற்கு பருவமழை நாளை அல்லது நாளை மறுநாள் முதல் மீண்டும் தீவிரமடைய இருக்கிறது. இதனால் மும்பை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த நிலை ஒரு வார காலத்துக்கு நீடிக்கலாம்” என்று அவர் தெரிவித்தார்.