மும்பையில் இரண்டு வழித்தடங்களில் இயக்க இருக்கும் மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் உத்தவ் தாக்கரே நாளை கொடியசைத்து தொடங்கி வைக்கின்றார்.
மராட்டிய மாநிலத்தில், குடிபட்வா என்று அழைக்கப்படும் மராட்டிய புத்தாண்டு தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் மும்பை வாசிகள் வெளியில் சென்று வருவதற்கு ஏதுவாக போக்குவரத்து வசதி கூடுதலாக இயக்கப்பட உள்ளது. மேலும் இரண்டு புதிய வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவையை தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி மெட்ரோ 2ஏ மற்றும் மெட்ரோ 7 ஆகிய வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்க உள்ளது.
புதிய வழித்தடமான 2ஏ தானுக்கர்வாடியில் இருந்து தகிசர் கிழக்கு வரை அமைக்கப்பட்டுள்ளது. காந்திவிலி மேற்கு, பாகாடி எக்சர், போரிவிலி மேற்கு, எக்சர், மண்டபேஸ்வர், கண்டார்பாடா, ஆனந்த்நகர் ஆகிய ரெயில் நிலையங்களில் மெட்ரோ ரெயில் நின்று செல்லும். மேலும் மெட்ரோ 7 வழித்தடமானது ஆரேகாலனியில் இருந்து தகிசர் கிழக்கு வரை அமைக்கப்பட்டுள்ளது. இதில் தின்தோஷி, குரார், அக்ருலி, பொய்சர், மாகாதானா, தேவிபாடா, ராஷ்ட்ரீய உதயான், ஒவ்ரிபாடா ஆகிய ரெயில்நிலையங்களில் மொட்ரோ நின்று செல்கிறது. இந்த நிகழ்ச்சியை முதல்வர் உத்தவ் தாக்கரே கொடியசைத்து நாளை தொடங்கி வைக்க உள்ளார்.