மும்பை குடிசை வாழ் மக்களின் நிலை குறித்து கவலை தெரிவித்துள்ள தேசிய மனித உரிமை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, மும்பையில் உள்ள குடிசை வாசிகள் தங்களுடைய வாழ்க்கை நிலை குறித்து தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். அந்தப் புகாரின் அடிப்படையில், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பினோம். அந்த நோட்டீஸ்-க்கு மராட்டிய அரசு தலைமைச் செயலாளர் மூலம் பதில் அளித்தது.
அதில் குடிசைப் பகுதியில் வாழும் மக்களுக்கு வீடு வழங்க மாநில அரசு மத்திய அரசு உதவியுடன் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டம் மூலம் பல முயற்சிகள் எடுத்து வந்தோம். ஆனால் நிதி பற்றாக்குறை அதற்கு தடையாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இதேபோன்று மத்திய அரசு அனுப்பிய பதிலில், மராட்டியத்தில் 2.24 லட்சம் வீடுகள் ஒதுக்கப்பட்டது. இதில் மும்பைக்கு மட்டும் 2 லட்சம் வீடுகள் ஒதுக்கப் பட்டது என கூறியுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து 4 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாநில தலைமைச் செயலாளர் மத்திய அரசு ஆணையிட்டுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.