தொடக்க வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் 6 லட்சம் ரூபாய் வரை பருத்தி விற்பனையாகியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தினர் சார்பில் வாரந்தோறும் திங்கள்கிழமையன்று பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். அதன்படி அக்கரைபட்டியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்தில் சேலம், எடப்பாடி, கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி, ஆத்தூர், திருப்பூர், அவிநாசி, கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து வியாபாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
இதனையடுத்து ராசபாளையம், அக்கரைப்பட்டி, மாமுண்டி, பொரசல்பட்டி, நத்தமேடு, வெண்ணந்தூர், மல்லசமுத்திரம், மதியம்பட்டி, சவுதாபுரம், குருசாமிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் தாங்கள் விளைவித்த 201 பருத்தி மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்துள்ளனர். இந்த ஏலத்தில் சுரபி ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக 8,400 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 10,509 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் மொத்தம் 6 லட்சம் வரை பருத்தி விற்பனையாகியுள்ளது.