வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் 1 கோடியே 38 லட்சம் வரை விற்பனை நடைபெற்றுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் வழக்கம் போல பருத்தி ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்திற்கு நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் என தாங்கள் விளைவித்த 2,700 பருத்தி மூட்டையை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து கோவை, திருப்பூர், அவிநாசி, சேலம், தேனி, கொங்கணாபுரம், திண்டுக்கல் என பல பகுதிகளில் இருந்து வியாபாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் சுரபி ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக 9,219 ரூபாய்க்கும், அதிக பட்ச விலையாக 11,089 ரூபாய்க்கும், ஆர்.சி.எச். ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு 6,360 ரூபாயில் இருந்து 9,109 ரூபாய்க்கும், கொட்டு ரக பருத்தி 2,999 ரூபாயில் இருந்து 5,649 ரூபாய் வரை ஏலம் விடப்பட்டது.
இதேபோல் ராசிபுரம் வேளாண்மை விற்பனையாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ஆர்.சி.எச் ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு 7,889 ரூபாயில் இருந்து 9,491 ரூபாய்க்கும், டி.சி.எச் ரக பருத்தி 12,009 ரூபாயில் இருந்து 12,769 ரூபாய்க்கும் ஏலம் விடப்பட்டுள்ளது. இந்த ஏலத்தில் 2,058 பருத்தி மூட்டைகள் விற்பனையான நிலையில் மொத்தம் 70 லட்சம் வரை ஏலம் போனது. மேலும் நாமக்கல் மற்றும் ராசிபுரத்தில் மொத்தம் 1 கோடியே 38 லட்சத்திற்கு பருத்தி விற்பனை செய்யப்பட்டுள்ளது.