கிணற்றுக்குள் விழுந்த காட்டெருமையை தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்டனர்.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள முளையூர் புன்னமலை வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டெருமை புன்னமலை அருகில் இருக்கும் தனியார் தோட்ட பகுதிக்குள் நுழைந்து விட்டது. அதன்பின் அங்கிருந்த 40 அடி ஆழக் கிணற்றுக்குள் காட்டெருமை எதிர்பாராதவிதமாக தவறி விழுந்துவிட்டது. இதனை அடுத்து மறுநாள் காலை தோட்டத்திற்கு சென்ற விவசாயிகள் காட்டெருமை கிணற்றுக்குள் விழுந்து கிடப்பதை பார்த்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு நிலைய வீரர்கள் பொக்லைன் மற்றும் கிரேன் எந்திரங்களின் உதவியோடு காட்டெருமையை மீட்க முயற்சி செய்துள்ளனர். ஆனாலும் அது முடியாததால் ஓசூரில் இருந்து கால்நடை மருத்துவர்களான பிரகாஷ், கலைவாணன் போன்றோரை வரவழைத்தனர். அவர்கள் துப்பாக்கி மூலம் காட்டெருமைக்கு மயக்க ஊசி செலுத்தி பிறகு தீயணைப்பு துறையினர் சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கயிறு கட்டி அதனை உயிருடன் பத்திரமாக மீட்டனர். இதனைத் தொடர்ந்து சிகிச்சை முடிந்த பிறகு வனத்துறையினர் காட்டெருமையை வனப்பகுதிக்குள் கொண்டு விட்டனர்.