சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஊரடங்கு மீறி பைக்கில் மது அருந்தி வந்த முருகேசன் என்பவரை காவல்துறையினர் தாக்கியதில் நேற்று உயிரிழந்தார். இது சம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து பல தரப்பினரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து முருகேசனை அடித்து கொலை செய்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி மற்றும் காவலர் முருகன் ஆகியோரை கைது செய்து பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து உள்ளது. இந்நிலையில் முருகேசன் மரணத்திற்கு காவலர்களின் தாக்குதல் ஒரு காரணமாக இருந்தாலும் அவரின் கொலைக்கு மதுக்கடைகள் தான் காரணம் என்றும், அவரது கொலைக்கு மாநில அரசு முழு பொறுப்பேற்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். இனியாவது டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.