கிராமங்களில் முறையான சாலை வசதி இல்லாததால் சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் வாக்குபதிவு உபகரணங்களை தலையில் சுமந்து கொண்டு ஊழியர்கள் நடந்து சென்றுள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் மொத்தம் 25 பதவிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு திமுக, அதிமுக, என மொத்தம் 12 பேர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் 10 பதவிகளுக்கான வேட்பாளர்கள் போட்டியின்றி வெற்றி பெற்ற நிலையில் மீதமுள்ள 15 பதவிகளுக்கான தேர்தல் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றுள்ளது.
இதனையடுத்து தேர்தலுக்காக மாவட்டத்தில் மொத்தம் 141 வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ராசிபுரம் அருகே உள்ள போதமலை கீழூர், கெடமலை, மேலூர் ஆகிய கிராமங்களில் 1,222 வாக்காளர்கள் உள்ள நிலையில் 3 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் போதமலை கீழூர் கிராமத்திற்கு சாலை வசதி இல்லாததால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே மண்டல தேர்தல் அலுவலர் பழனிசாமி தலைமையில் 12 பேர் அடங்கிய குழுவினர் தேர்தலுக்கு தேவையான ஒட்டுபெட்டிகள், சின்னங்கள் அடங்கிய வாக்குசீட்டுகள், கொரோனா தடுப்பு உபகரணங்கள் போன்ற பொருட்களை ஊழியர்கள் தலைசுமையாக கொண்டு சென்றுள்ளனர். இவர்களுடன் பாதுகாப்பிற்கு வனத்துறையினர், காவல்துறையினர் மற்றும் சுகாதாரத்துறையினரும் உடன் சென்றுள்ளனர். இதனையடுத்து மிகவும் கரடு முரடான பாதை வழியாக மிகவும் அவதியடைந்து 8 கிலோ மீட்டர் தூரம் நடத்து வாக்கு சாவடி மையத்திற்கு சேர்ந்தடைந்து தேர்தலுக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்துள்ளனர்.