சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவின் மறைவு செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுவன் அவரைக் காண விட்டை விட்டு வெளியேறியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மஹாராஜ்கஞ்ச் மாவட்டம் நௌதன்வாவைச் சேர்ந்த சாரநாத் யாதவ்(12) என்ற சிறுவன், முலாயம் சிங் யாதவால் ஈர்க்கப்பட்டவன் ஆவார். இந்நிலையில் அவரின் மறைவு பற்றி செய்தி அறிந்ததும் சிறுவன் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி, இறுதியாக அவரை காணவேண்டும் என்று வீட்டை விட்டு வெளியேறியுள்ளான். இதையடுத்து சிறுவன் கோரக்பூரையும், பிறகு லக்னௌவையும் அடைந்துள்ளான். அதன்பின் யாரோ தனக்கு தவறான விலாசத்தைக் கொடுத்ததாகவும், எட்டாவாவை அடைவதற்குப் பதில், கான்பூரில் இறங்கினேன் என சிறுவன் கூறினான்.
கான்பூரில், சிறுவன் சுற்றித்திரிவதை பார்த்த ஜிஆர்பி அதிகாரிகள் அவனை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அதனை தொடர்ந்து சிறுவனது பெற்றோரைத் தொடர்புகொண்டு அவனை அழைத்து செல்லும்படி கூறினர். பின் பெற்றோர்கள் போலீஸ் நிலையத்துக்கு விரைந்துள்ளதாக அந்த அதிகாரி கூறினார். தான் முலாயம் சிங்கின் தீவிர ஆதரவாளர் எனவும் மறைந்த தலைவருக்காகத் தொடர்ந்து பணியாற்றுவேன் எனவும் அந்த சிறுவன் தெரிவித்தான்.