Categories
மாநில செய்திகள்

முலாயம் சிங் யாதவ் மறைவு : தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்..!!

முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான முலாயம் சிங் யாதவ் கடந்த சில தினங்களுக்கு முன் கடும் உடல்நலக் குறைவால் டெல்லியை அடுத்த குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.. அவருக்கு வயது 82. ஆனால் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவருமான முலாயம் சிங் யாதவுக்கு உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

முலாயம் சிங்கின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும், மூச்சுவிட முடியாததால் அவருக்கு செயற்கை சுவாசம் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் வழங்கப்படுவதாகவும் மருத்துவமனை தெரிவித்த நிலையில் இன்று திடீரென காலமானார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், உ.பி.யின் முன்னாள் முதல்வரும், மூத்த தலைவருமான முலாயம் சிங் யாதவ் மறைவு வருத்தம் அளிக்கிறது. ஓபிசிக்கான இடஒதுக்கீட்டிற்காக நின்ற இந்திய அரசியலில் மிக உயர்ந்த நபர்களில் ஒருவரான திரு முலாயம் சிங் மதச்சார்பற்ற கொள்கைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.

அவரது மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு. தந்தையை இழந்து வாடும் என் சகோதரர் அகிலேஷ் யாதவ் மற்றும் அவரது குடும்பத்திற்கு  இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். திமுக சார்பில், கட்சியின் பொருளாளரும், திமுக நாடாளுமன்றக் கட்சித் தலைவருமான திரு டி.ஆர். பாலு முலாயம் சிங் யாதவ் இறுதிச் சடங்கில்  பங்கேற்பார்” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே சொந்த ஊரான சைபஃபாய் கிராமத்தில்  இறுதி சடங்கு நடைபெறும் என முலாயம் சிங் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். உத்தர பிரதேசத்தில் 3 நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Categories

Tech |