முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு வக்கீல் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழகம் – கேரளா மாநில எல்லையில் முல்லை பெரியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணை மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி ஆகிய 5 மாவட்டங்களுக்கு நீராதாரமாக திகழ்கின்றது. இந்த அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக தேக்கி வைத்துக் கொள்ளவும், பேபி அணையை பலப்படுத்திவிட்டு 152 அடி வரை நீர் மட்டத்தை அதிகரித்துக்கொள்ளவும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. அதன்படி கடந்த 2014ஆம் வருடம் இந்த தீர்ப்பு அமல் படுத்தப்பட்ட நிலையில் அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகின்றன.
இந்த அணை விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்து வழக்குகள் நடைபெற்று வருகின்றது. இந்த வழக்குகளில் தமிழக அரசின் தரப்பில் அரசு வக்கீல்கள் குழுவினர் ஆஜராகி வாதாடி வருகிறார்கள். இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணையில் தமிழக அரசின் சார்பாக வாதாடும் வக்கீல் குழுவினர் முல்லைப்பெரியாறு அணையில் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது அணையின் சிறப்பு கோட்ட செயற்பொறியாளர் சாம்இர்வின், உதவி பொறியாளர்கள் குமார், ராஜகோபால், பரதன் ஆகியோர் உடன் இருந்தார்கள்.
தமிழக அரசின் சார்பாக சுப்ரீம் நீதிமன்றத்தில் வாதாடும் கூடுதல் அட்வகேட் ஜெனரல் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், மூத்த வக்கீல்கள் உமாபதி, குமணன், காவிரி தொழில்நுட்ப குழு துணை தலைவர் செல்வராஜ் ஆகியோர் கொண்ட குழு தேக்கடியிலிருந்து படகு மூலம் அழைத்து சென்றுள்ளனர். அங்கு பிரதான அணை, பேபி அணை, மதகு பகுதிகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அதன்பின் வல்லக்கடவு வழியாக அணைக்கு வரும் பாதையை பார்வையிட்டார்கள். அப்போது அணையின் கட்டுமான தொழில் நுட்பங்கள் குறித்தும், அணையின் பராமரிப்புப் பணிகளில் எதிர்கொண்டு வரும் பிரச்சனைகள், இடையூறுகள் குறித்தும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் அவர்கள் கேட்டு அறிந்து கொண்டார்கள்.