முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “முல்லைப்பெரியாறு அணையை நான் கடந்த ஐந்தாம் தேதி அன்று பார்வையிட்டு பொறியாளர்களுக்கு அணையில் நீர் தேக்குவது பற்றி அறிவுரைகளை வழங்கினேன். பருவமழை காலத்தில் குறிப்பாக வெள்ள காலங்களில் கால முறைப்படி வரும் வெள்ள நீரை தேக்கி வைப்பதற்கு ஏதுவாக அணையின் நீர்மட்டத்தை முன்கூட்டியே நிர்ணயித்து, அதன்படி அணையின் நீர்மட்டத்தை முறைப்படுத்துவது மாத வாரியாக நீர்மட்ட அட்டவணை ஆகும்.
இதில் பருவகாலங்களில் ஜூன் 10ஆம் தேதி முதல் நவம்பர் 30ஆம் தேதி வரையில் ஒவ்வொரு பத்து நாட்களுக்கும் அணையின் நீர்மட்டம் எவ்வளவு இருக்கவேண்டும் என்று தீர்மானிக்கப்படுகிறது. மத்திய நீர்வள குழு குழுமத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்ட மாதவாரியான நீர்மட்ட அட்டவணை நேற்று காலை 142 வரை தேக்கப்பட்டு உள்ளது. உச்சநீதிமன்றத்தில் 142 அடி வரை தேக்கலாம் என்று ஆணையிட்ட பின்னர் 4வது முறையாக நேற்று அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் ஆணைப்படி மீதமுள்ள பணிகளை முடித்த பின்னர் அணையின் நீர்மட்டத்தை 152 அடிவரை உயர்த்தலாம். அதற்கு எல்லாவித முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தொடர்ந்து முதலமைச்சருடன் இது தொடர்பாக கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.