தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது.
அதன் காரணமாக கடந்த மாதம் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனாலும் கொரோனா பாதிப்பு குறைந்த பாடில்லை. அதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மே 10 முதல் மே 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் முழு ஊரடங்கு காலத்தில் செயல்பட அனுமதிக்கப்பட்ட தொடர் உற்பத்தி தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் இயங்குவதில் ஏற்படும் சிக்கல்களுக்கு உதவும் வகையில் 24 மணி நேரமும் செயல்படும் சேவை மையம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னையில் இயங்கும் இந்த சேவை மையத்திற்கான தொலைபேசி எண்கள்: 9677107722, 9994339191, 7823928262, 9629122906, 9962993496, 9962993497 இந்த எண்களில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.